1. Home
  2. தமிழ்நாடு

பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 6 பேர் உடல் சிதறி பலி..!

Q

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அப்பையநாயக்கன்பட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று(ஜன.4) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் பெரும் தீ பற்றிக் கொள்ள, ஆலையில் இருந்த பட்டாசுகள் சரமாரியாக வெடித்து சிதற ஆரம்பித்தன. பெரும் சத்தத்துடன் பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறியதில் 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாகின. விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.

வெடிகள் வெடித்துச் சிதறியதால் பல மீட்டர் தூரத்துக்கு வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தரைமட்டமான கட்டடங்களில் அதிக உஷ்ணம் காணப்படுவதால், இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பதை கண்டறியும் பணிகளில் சிக்கல் நிலவுகிறது.

வெடி விபத்து நிகழ்ந்த போது சம்பந்தப்பட்ட ஆலையில் எத்தனை பேர் பணியில் இருந்தனர் என்பது உறுதியாக தெரியவில்லை. பலர் காணவில்லை என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like