#BREAKING :சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு..!

சின்ன காமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 01) காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சிவகாசி சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் பலரும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து மளமளவென எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெடி விபத்தின் போது தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் இருக்கும் என கூறப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.