அதிர்ச்சி தகவல் : சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்த 1 ரூபாய் கூட அரசு செலவிடவில்லை..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், சுமார் 1087 பட்டாசு ஆலைகளும், 2963 பட்டாசு கடைகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இவ்வாறு இயங்கி வருபவற்றில் விதிமீறல்கள் காரணமாக, ஆண்டுதோறும் 5 முதல் 10 விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
இத்தகைய சூழலில், சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் போதிய வசதிகள் இல்லை எனவும், இதன்காரணமாகவே, விபத்துகளில் தீக்காயம் அடைபவர்கள் மதுரை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், வெளிவந்த தகவலின்படி, “கடந்த 2015 முதல் கடந்த மார்ச் 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயத்தோடு சுமார் 206 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 36 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இக்காலக்கட்டத்தில், சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்த எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்று தெரியவந்துள்ளது.
சமீபத்தில் 2024 பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2019 முதல் தற்போது வரை 64 முறை பட்டாசு ஆலை விபத்துக்கள் நடந்து இருப்பதாகவும் இதில் 131 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 146 பேர் காயமடைந்து இருப்பதாகவும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி அறிக்கை சமர்ப்பித்தார். இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் இத்தனை ஆண்டுகளில் எத்தனை பட்டாசு வெடி விபத்துக்கள் நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
சிவகாசியில் பட்டாசுக்கள் தயாரிப்பதுதான் அங்குள்ள மக்களின் பிரதான வேலை. இனியாவது அரசு இதை கவனத்தில் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்