சிவாஜி கணேசனின் 24-வது நினைவு நாள் இன்று..!
2001 ஆம் ஆண்டு தனது 72 ஆவது வயதில் காலமான சிவாஜி கணேசன், முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் பத்திரிகை இவரை 'இந்திய மார்லன் பிராண்டோ' எனப் புகழும் அளவுக்குப் பெயர்பெற்ற சிவாஜி கணேசன் பிரித்வி ராஜ்கபூர், அமிதாப் பச்சன், ராஜ்குமார் ஆகியோரின் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சிவாஜி கணேசன் புகழ்பெற்ற நடிகராக வளர்ந்துவந்த காலகட்டத்தில் பேசும் படம் என்று ஒரு பத்திரிகை இருந்தது. அந்த காலகட்டத்தில் மிகப்பிரபலமான சினிமா பத்திரிகையான பேசும் படத்துக்கு பல வாசகர்கள் இருந்தனர். அதில் ஒரு வாசகர் சிவாஜியின் அபார நடிப்பைப் புகழ்ந்து அவரை நடிகர்களுக்கெல்லாம் திலகம் எனப் பாராட்டி ஓர் கடிதமெழுதினார். அவ்வாறே சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்கிற அடைமொழி வந்தது.பாசமுள்ள குணச்சித்திர கதாபாத்திரமானாலும் கொடூர வில்லன் கதாபாத்திரமானாலும் இமேஜ் பார்க்காமல் நடித்த நட்சத்திர நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன்தான். பிச்சைக்காரன் வேடமேற்றாலும் பெரும் செல்வந்தராக கோட் சூட் அணிந்து நடித்தாலும் கண்ணியமான காவல் அதிகாரி அல்லது நீதிபதியாக நடித்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கான வசன உச்சரிப்பு மட்டுமின்றி உடல் மொழியையும் கச்சிதமாக செய்திருப்பார் சிவாஜி கணேசன். சமகால நடிகர்களான ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், எஸ்எஸ்ஆர், ஏவிஎம் ராஜன் ஆகியோருடன் அவ்வப்போது இணைந்து பணியாற்றிய சிவாஜி கணேசன், நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
பாவமன்னிப்பு, பச்சை விளக்கு, வியட்நாம் வீடு, இரு மலர்கள், அவன்தான் மனிதன் என பல படங்களில் வித்யாசமான வேடங்களில் நடித்த சிவாஜி 80-களின் துவக்கத்தில் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோது தனது மார்க்கெட் சரிவைப் பொருட்படுத்தாது அடுத்த தலைமுறையுடன் இணைந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை நிரூபித்தார். தனது மகன் பிரபு நாயகனாக நடிக்கும் படங்களிலும் அவ்வப்போது குணச்சித்தர கதாபாத்திரமேற்ற சிவாஜி, மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் மகனுக்கே சவால்விடும் கதாபாத்திரத்தில் நடிப்பில் பிரபுவை மிஞ்சி இருப்பார். ரஜினி, கமல், சத்யராஜ் ஆகியோரை அடுத்து 90-களில் விஜய், முரளி என பலருடன் இணைந்து நடித்த சிவாஜி, 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பாவில் ரஜினியின் தந்தையாக நடித்து தனது நீண்ட நடிப்புப் பயணத்தை நிறைவு செய்துகொண்டார். இன்று அவரது ரசிகர்கள் அவரது நினைவுநாளில் அவரை நினைவுகூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.