ஆர்.எஸ்.எஸ்.ஸோடு பழகி பழகி சகோதரி வானதி சீனிவாசனுக்கு அரசியல் பற்றியும் தெரியவில்லை - மாணிக்கம் தாகூர்..!

விருதுநகரில் மேம்படுத்தப்பட்ட இரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர், “விருதுநகர் ரயில் நிலையத்திற்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை விளம்பரப்படுத்த நடத்தப்பட்ட விழாவிற்கு 20 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விளம்பர டெக்னிக் பிரதமர் மோடியைச் சாரும். பிரதமர் மோடி விருதுநகருக்கு என்ன செய்தார் என்று தேர்தலின் போது நாம் கேட்டால் ஏழு கோடி ரூபாய் கொடுத்தார் என்பது மட்டுமே வரலாறாக இருக்கும். விருதுநகருக்கான திட்டங்கள் அனைத்தும் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருக்கிறது எதுவும் செயல்படுத்தப்படவில்லை. உதாரணமாக ஜவுளி பூங்கா அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இருக்கிறது. இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ராகுல் காந்தி பதவி பறிப்பில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தின் வெற்றி அவர் பாராளுமன்றம் வர அனுமதிக்க வேண்டும். எப்படி அவரை தடை செய்து 24 மணி நேரத்தில் பதவியை பறித்தனரோ அதேபோல் 24 மணி நேரத்துக்குள் அவர் வர அனுமதிக்க வேண்டும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி இது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் சபாநாயகரும் பாராளுமன்ற செயலாளரும் அவரை சந்திப்பதை தவிக்கிறார்கள். ராகுல் காந்தி அவர்கள் பாராளுமன்றம் வந்தால் மோடி அதானி கூட்டுக் கொள்கையை பற்றி பேசுவார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசுவார், இதனால் பயப்படுகின்றனர். இந்தியா கூட்டணி கட்சிகளை கண்டு மோடி அச்சம் கொள்கிறார்” என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி வெறுப்பு அரசியல் செய்வதாக வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆர்.எஸ்.எஸ்.ஸோடு பழகி பழகி சகோதரி வானதி சீனிவாசனுக்கு அரசியல் பற்றியும் தெரியவில்லை வெறுப்பு பற்றியும் தெரியவில்லை. இரண்டுக்குமான வித்தியாசம் தெரியவில்லை ராகுல் காந்தி அவர்களின் அரசியல் அன்பு அரசியல் பாசத்திற்கான அரசியல் ஏழைகளின் அரசியல் அவர் ஆர் எஸ் எஸ் ஐ கூட வெறுத்து பேசியதில்லை ஆர் எஸ் எஸ் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் பேசி வந்தார்.” என்றார்.
அமித்ஷா அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்தி கட்டாயம் என்று பேசியது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் இந்தி திணிப்பு ஒரு காலத்திலும் ஏற்கப்படாது. காங்கிரஸ் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று பதிலளித்தார். கள்ளுக்கடையை திறப்போம் என்று அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை யாத்திரை நடத்தவில்லை, டிராமா கம்பெனி நடத்துகிறார். காலையில் மூன்று கிலோ மீட்டர் மாலையில் 4 கிலோ மீட்டர் நடக்கிறார். இது யாத்திரை அல்ல வாக்கிங். ஆடல் பாடல் குதிரை ஆட்டம் போன்றவற்றை அவர் செல்வதற்கு முன்பாக எல்லா இடங்களிலும் கொண்டு சென்று ஒரு டிராமா கம்பெனியை போல யாத்திரை நடத்துகிறார். அண்ணாமலை யாத்திரையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. யாத்திரையின் போது அண்ணாமலை உடன் வந்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், வானதி, எச்.ராஜா போன்றோரே அவர் உடன் வரவில்லை. அவரை தனியாக விட்டு விட்டு கழன்று சென்றுவிட்டனர். அவரது அரசியல் வெறும் டுவிட்டர்அரசியல். அவர் விளம்பரத்தை தேட இந்த யாத்திரையை நடத்துகிறார். அதில் ஒன்று தான் இந்த கள்ளுக்கடை திறப்பு பற்றிய பேச்சு.” என்று கூறினார்.