1. Home
  2. தமிழ்நாடு

‛மீ டூ’ விவகாரம் குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு பாடகி சின்மயி பேட்டி..!

1

பிரபல பின்னணி பாடகி சின்மயி, பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல் முன்னணி கதாநாயகிகள் பலருக்கும் டப்பிங்கும் பேசி வந்தார். சில ஆண்டுக்கு முன் ‛மீ டூ’ விவகாரம் கிளம்பியது. கவிஞர் வைரமுத்து மீது திடுக்கிடும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சின்மயி முன் வைத்தார். அதேபோல, நடிகர் ராதாரவி மீதும் புகார்களை கூறினார்.அதன் எதிரொலியாக, அவருக்கு தமிழில் டப்பிங் பேசவும், பாடல்கள் பாடவும், மறைமுக தடை விதிக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதனால் தெலுங்கில் மட்டுமே இவர் பணியாற்றும் சூழல் இருந்தது.

இந்நிலையில், ‛மீ டூ’ விவகாரம் குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, பாடகி சின்மயி அளித்த பேட்டி:

கேரளா திரையுலகின் இருண்ட முகத்தை அம்பலப்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கையின் எதிரொலியாக, பாதிக்கப்பட்ட பலரும் புகார் தர முன் வருவர். நடிகர் சங்க பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த சித்திக் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவர் மட்டுமே, பாலியல் குற்றச்சாட்டை சந்திக்கவில்லை.

பாலியல் துன்புறுத்தல் புகார்களை வெளியில் தெரிவித்து நீதி கேட்பவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது; தங்கள் புகார்களை நிரூபணம் செய்வதிலும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், புகார் அளிப்பது வெகு சிரமம் என்ற நிலைமையை நமது சிஸ்டம் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசிய நடிகர்களைப் பாராட்டுகிறேன். தொழில்துறையில் உள்ள மற்றவர்களும் இதைப் பின்பற்ற வேண்டும்.

பல வழக்குகளில் பெண்கள் போலீசில் புகார் அளிக்காததற்கு பல காரணங்கள் உள்ளன. ஆதாரங்கள் அனைத்தும் சந்தர்ப்ப சூழ்நிலையிலானவையாக இருக்கும். காயங்கள் கூட சில நாட்களில் குணமாகி விடும்.

எனவே இத்தகைய புகார்கள் எழும்போது அதற்கு தீர்வு காண, அதன் தொடக்கம் முதலே விரைவான, ‘சென்சிடிவ்’ தன்மை கொண்ட நீதி அமைப்பு வேண்டும். ஏனெனில், நாம் எப்போதும் உடலுடன் பொருத்தப்பட்ட கேமராவுடன் சுற்றிக்கொண்டிருக்க முடியாது.

‘மீ டு’ குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களுடன் அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும் எப்போதும் உறவில் இருக்கின்றனர். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஆண்களை அரசியல்வாதிகள் ஆதரிக்கிறார்கள். இதற்கு காரணம் ஓட்டுவங்கி தான். இவ்வாறு பாடகி சின்மயி கூறினார்.

Trending News

Latest News

You May Like