கேரள கடற்பகுதியில் தீ விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்..!

நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்புவில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு, 'வாங் ஹை 506' என்ற சரக்கு கப்பல் சமீபத்தில் பயணித்தது.
சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த கப்பலில் 150க்கும் மேற்பட்ட 'கன்டெய்னர்'களில் பலவிதமான ரசாயன பொருட்கள் இருந்தன.
கடந்த, 9ம் தேதி கேரள கடற்பகுதியான கண்ணுார் அழிக்கால் துறைமுகத்தில் இருந்து, 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் பயணித்தபோது, இந்த கப்பலில் தீப்பிடித்தது.
கப்பல் முழுதும் பரவிய தீயால், அதிலிருந்த கன்டெய்னர்கள் வெடித்து சிதறின. இதனால், கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 22 பேரும் கடலில் குதித்தனர்.
இதில், 18 பேர் மீட்கப்பட்டு கர்நாடகாவின் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலில் மூழ்கி மாயமான நான்கு பேரை தேடும் பணி தொடர்கிறது. கப்பலில் தீ பற்றியதால், அது கடலில் சாய துவங்கியது. இதையடுத்து, கடலோர காவல் படைக்கு சொந்தமான வாட்டர் லில்லி எனப்படும் அவசரகால சேவை கப்பல் வாயிலாக, அதை நிமிர்த்தும் பணி சமீபத்தில் துவங்கியது.
இதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் கப்பல் கடல் நடுவே இழுத்துச் செல்லப்பட்டது. கரையில் இருந்து, 27 நாட்டிக்கல் மைல் தொலைவில் நின்றிருந்த கப்பல், தற்போது 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு, 2 கி.மீ., வேகத்தில் கப்பல் நகர்த்தப்படுகிறது.
இந்தப் பணியில் கடலோர காவல்படையின் 'சீ கிங்' ஹெலிகாப்டர் மற்றும் சாக் ஷன், சமர்த், விக்ரம், ஷிப் ஷார்தா போன்ற கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பலத்த காற்று காரணமாக, கரையை நோக்கி கப்பல் நகரும் பணியும் இந்த கப்பல்கள் வாயிலாக கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.
கப்பல் தொடர்ந்து எரிந்து வருவதாலும், வானிலை காரணமாகவும், அதை நகர்த்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர கடலோர காவல்படையினர் முடிவு செய்துள்ளனர்.