ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணிடம் சில்மிஷம்.. மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சஸ்பெண்ட்..!

மதுரை அரசினர் பல்நோக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த மாதம், அண்ணாநகரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் வந்தார். அவருக்கு, கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்தப்பெண் உடல்நல பரிசோதனைக்காக அங்கு சென்றார்.
அவரை, ஆஸ்பத்திரியின் நர்ஸ் உதவியுடன் ரேடியாலஜி டாக்டர் பரிசோதனை செய்தார். அவர் நர்சை ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை பரிசோதனை செய்தார். அப்போது அந்த பெண்ணிடம் டாக்டர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண், 15 நிமிடங்களுக்கு பிறகு கண்ணீருடன் வெளியே வந்தார். அங்கிருந்த தாயாரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் தாயார், ரேடியாலஜி துறைத்தலைவர் சுந்தரியிடம் புகார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக அவர் விசாரணை கமிட்டி அமைத்தார். இந்த குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்மணி மற்றும் டாக்டரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் அடிப்படையில் மருத்துவ விசாரணைக் கமிட்டி அறிக்கையை தயாரித்தது. இது சென்னையில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனரகம் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பாலியல் புகாரில் தொடர்புடைய ரேடியாலஜி டாக்டர் சக்கரவர்த்தி இன்று பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
டாக்டர் சக்கரவர்த்தி மீது மதுரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் போலீசில் புகார் கொடுக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் அவர், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிகிறது.