1. Home
  2. தமிழ்நாடு

இந்த ஆட்சியில் பலூன் கூட பறக்க விடக் கூடாதா? பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது : ஜெயக்குமார்..!

1

அதிமுக எழுச்சி மாநாடு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர பணிகளில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை மாநாட்டிற்கு திரட்ட வேண்டும் என்றும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை ராயபுரம் அலுவலகத்தில் மாநாடு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “இதுவரை எந்த கட்சியும் நடத்தாத வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு வெற்றி கரமாக நடைபெற்று முடிய போகிறது” என்றார்.

தொடர்ந்து நீட் தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி திமுக போராட்டம் குறித்த கேள்விக்கு, “நீட் தேர்வு குறித்து போராட்டம் நடத்த எந்த முகாந்திரமும் தகுதியும் திமுகவிற்கு இல்லை. நீட் தேர்வை கொண்டு வந்த போது போராடாமல் இன்று போராடுவதை பார்க்கும்போது திமுகவினர் சந்தர்ப்பவாதிகள் என்பது தமிழ்நாடு மக்களுக்கு நிச்சயம் தெரியும்.

திமுக ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி இருந்த போது தான் நீட் தேர்வு மசோதாவை கொண்டு வந்தனர். நீட் தேர்வுக்குப் போராட தகுதி இல்லாதவர் உதயநிதி. நீட் தேர்வால் தந்தையும் மகனும் தற்கொலை செய்து கொண்டது சோகமான நிகழ்வு. உதயநிதி அங்கு சென்றபோது மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தலையை தொங்கப்போட்டு கொண்டு வருகிறார்.

அதிமுக மாநாடு செய்திகள் இடம் பெறக் கூடாது என்பதற்காக அன்றைய தினமே போராட்டத்தை நடத்துகின்றனர். இதனால் மட்டும் மாநாடு நடப்பது வெளியே தெரியாமல் போய்விடுமா?.

திமுகவினர் விளம்பர பேனர் வைத்தால் வழக்குப் போடுவது இல்லை. ஆனால் மாநாட்டுக்கு நாங்கள் பேனர் வைத்தால் வழக்குப் போடுகிறார்கள். பொள்ளாச்சியில் விளம்பர பலூன் பறக்கவிட்டதற்கு கூட வழக்குப் பதிவு. இந்த ஆட்சியில் பலூன் கூட பறக்க விடக் கூடாதா? பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”திருநாவுக்கரசு கூறுவது முற்றிலும் பொய் அவருக்கு அடையாளம் காட்டியது யார். துணை சபாநாயகர் பதவி கொடுத்து அழகுபார்த்தது எம்.ஜி.ஆர் தான். திருநாவுக்கரசின் அரசியல் வரலாற்றில் அடையாளம் காட்டியது அதிமுக தான்.

எங்களுக்கென்று பெரிய அரசியல் வரலாறு இருக்கிறது. அதிமுகவின் வரலாற்றை கொண்டாடும் மாநாடு என்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பில்லை.

நியாயமான கோரிக்கை வைக்கும் மீனவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. கன்னியாகுமரியில் இருந்து நாகபட்டினம் வரை கடலில் காற்றாலை அமைத்தால் மீனவர்கள் எப்படி தொழில் செய்ய முடியும் என்று தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like