ஆய்வில் அதிர்ச்சி தகவல்..! கிரீன் கார்டு கிடைப்பதற்கு முன்பாகவே இந்தியர்கள் வயதாகி இறந்துவிடக் கூடும்..!

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு, அங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என்பதே கனவாக உள்ளது. அதற்கு கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர விசா அவசியமானது. அதனை பெற ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். எனினும் அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். ஒதுக்கப்பட்டுள்ள கிரீன் கார்டுகளை விட கிரீன் கார்டுகளுக்கு தகுதியானவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்பதால் காத்திருக்கும் காலம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இவ்வாறு கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்களில் சுமார் 4 லட்சம் பேர், கிரீன் கார்டு கிடைப்பதற்கு முன்பாகவே இறந்துவிடுவார்கள் என புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேடோ நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது நாட்டில் நிலுவையில் உள்ள 18 லட்சம் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களில் 63 சதவீதம் இந்தியர்களின் விண்ணப்பங்கள். இதுதவிர குடும்ப அமைப்பிலிருந்து வரப்பெற்ற 83 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இந்தியாவில் இருந்து புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள், 134 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும். இதன்மூலம், வேலைவாய்ப்பு அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள் சுமார் 4,24,000 பேர் காத்திருக்கும் காலத்தில் மரணம் அடைவார்கள். அவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்களாக இருப்பார்கள். புதிய முதலாளிகளால் வழங்கப்படும் விண்ணப்பதாரர்களில் இந்தியர்கள் பாதியாக இருப்பதால், புதிதாக ஸ்பான்சர் செய்யப்பட்டவர்களில் பாதி பேர் கிரீன் கார்டு பெறுவதற்கு முன்பே இறந்துவிடுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.