சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..! ராட்வீலர் நாயை ஏவி முதியவர் வேட்டியை இழுத்து நிர்வாணமாக்கிய கொடுமை..!

தமிழக அரசு ராட்வீலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய்களுக்கு தடை விதித்தது குறிப்பாக மத்திய அரசின் தடையை அடிப்படையாக வைத்து தமிழக அரசும் தடை விதித்தது.
23 வெளிநாட்டு ரக நாய்கள் மீதான மத்திய அரசின் தடை உத்தரவுக்கு நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் தமிழக அரசு வாபஸ் பெற்றது.
இருப்பினும் சென்னை மாநகராட்சி இதுபோன்று வெளிநாட்டு நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக மாநகராட்சி பூங்காக்களில் நாய்களை அழைத்து வருவது தொடர்பாகவும், வெளியில் நாய்களை நடைப்பயிற்சிக்காக அழைத்து வரும்போது வாயைக் கட்டி அழைத்து வரவேண்டும் எனவும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
சென்னை மாநகராட்சி இதற்காக உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் இந்த கட்டுப்பாட்டில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் மாநகராட்சியின் விதிகளை மீறி தொடர்ந்து பல உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் புத்தாகரம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதி மாரியப்பன் மற்றும் அவரது மனைவி தெருவில் நின்றுகொண்டிருந்தபோது ராட்வீலர் நாய் தொல்லை கொடுத்துள்ளது. இது குறித்து நாயின் உரிமையாளர் கவியரசனிடம் தட்டிக்கேட்டனர்.
இதனால் ஆத்திரடமடைந்த கவியரசன், தனது ராட்வீலர் நாயை ஏவி விட்டு வயதான தம்பதியை கடிக்க விட்டுள்ளார். ராட்வீலர் நாய் அந்த தம்பதியை கடிக்க துரத்தியபோது நாயை தடுக்காமல் கவியரசன் வேடிக்கை பார்த்துள்ளார்.
பெரியவர் மாரியப்பன் அணிந்திருந்த வேட்டியையும் கடித்து இழுத்து அரை நிர்வாணமாக்கி அவரை ஓட விட்ட கொடுமையும் நிகழ்ந்து உள்ளது.
இதை தட்டிக்கேட்ட ரமேஷ் என்பவர் மீதும் நாயை விட்டு கடிக்க விட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள பெண்களையும் நாய் துரத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை யடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று கூடி தட்டிக் கேட்ட போதும் நாயை ஏவி விட்ட உரிமையாளர் தனக்கு காவல்துறை உயர் அதிகாரியையும், வழக்கறிஞர்களையும் தெரியும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கவியரசன் மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.