நெகிழ்ச்சி சம்பவம்..! நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம்..!
வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பேய் மழை கடந்த 30ம் தேதி கொட்டித் தீர்த்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமும், சடலங்களுமே தென்படுகின்றன.
பலர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வீடு, பொருள்கள், உறவினர்கள் என அனைத்தையும் இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் அப்பகுதி மக்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானமளிக்க முன்வந்துள்ள சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள உப்புதாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாவனா. இவரது கணவர் சஜின் பராகரா என்பவர் நேற்று முன்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்ட பதிவு ஒன்றில், "பச்சிளம் குழந்தைகள் யாருக்காவது தாய்ப்பால் தேவைப்பட்டால் என்னை அணுகுங்கள். என் மனைவி தாய்ப்பால் தானம் அளிக்கத் தயாராக உள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தார்.