கோவையில் அதிர்ச்சி..! குடிநீர் தொட்டியில் இருந்த மனித எலும்புகள்...சிறிது நேரம் கழித்து மாயம்..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காலிப்பாளையம் கிராமத்தில் அமைந்திருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது, தொட்டிக்குள் மனித எலும்பு இருப்பதைக் கண்ட அவர்கள், பின்னர் அவற்றைத் தொட்டியில் இருந்து அகற்றி, இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட எலும்புகளை அப்பகுதியில் வைத்துவிட்டு, அவர்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் வந்து பார்த்தப் போது, அங்கிருந்த எலும்புகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா மற்றும் கோவை மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் பஷீர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
எலும்புகள் எப்படி குடிநீர் தொட்டிக்குள் வந்தன? இது யாருடையது என்பது தொடர்பாகவும் அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாயமான எலும்புகளை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.