1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு ஷாக்..! தமிழகத்தில் அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்வு..!

1

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று (அக்.11) பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அந்த வரிசையில் சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அரசு பல்வேறு ஆண்டுகளில் போக்குவரத்தில் வரி விதிப்பு முறைகளை மேற்கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வரிகளை அரசு உயர்த்தவில்லை. தற்போது வாகனங்களின் மீது விதிக்கப்படும் வரியில் இருந்து வருமானம் குறைவாக வருகிறது.

அதனால் மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்த தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில், நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் படி சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ‘கேப்’கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது.

குறிப்பாக படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு 4,000 ரூபாய் வரை வரி உயர்த்தப்படுகிறது.புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி 12 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இதே போன்று, புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாய், இலகுரக வாகனங்களுக்கு 2,250 ரூபாய் மற்ற வாகனங்களுக்கு 3,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

  • 10 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வாகனங்கள், நான்கு முதல் ஏழு பேர் வரை சுற்றுலா செல்ல, தற்போது வசூலிக்கப்படும்.. 10 சதவீத வரி, 13 சதவீதமாக உயர்த்தப்படும்
  • 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட, ஏழு பேர் வரை செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தற்போதுள்ள 15 சதவீத வரி, 18 சதவீதமாக உயரும். 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 20 சதவீதம் வரி வசூலிக்கப்படும்
  • பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களுக்கு, ஒவ்வொரு இருக்கைக்கும் தற்போது, 50 ரூபாயாக உள்ள காலாண்டு வரி, 75 ரூபாயாகவும்; கல்லுாரி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பயணிக்க, ஒவ்வொரு இருக்கைக்கும் இப்போதுள்ள வரி, 100 ரூபாயிலிருந்து 125 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • - இந்த வாகனங்கள் மற்ற பணிக்காக செல்லும்போது, 'ஏசி' வாகனமாக இருந்தால், ஒவ்வொரு இருக்கைக்கும் தற்போதுள்ள 600 ரூபாய், 900 ரூபாயாகவும், 'ஏசி' அல்லாத வாகனங்களுக்கு, 500 ரூபாய் என்பது, 600 ரூபாயாகவும் உயர்த்தப்படும்
  • புதிய இரு சக்கர வாகனம், 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், தற்போதுள்ள 8 சதவீத வரி, 10 சதவீதமாக உயரும். 1 லட்சம் ரூபாய்க்குள் மேல் உள்ள வாகனங்களுக்கு, தற்போதுள்ள 8 சதவீத வரி, 12 சதவீதமாக உயர்த்தப்படும்.
  • பழைய வாகனங்களுக்கு, அதன் வாழ்நாள் ஆண்டுக்கு ஏற்றார்போல், தற்போது 5 முதல் 7.50 சதவீதம் வரை வரி உள்ளது உள்ளது. இது, 10 சதவீதம் வரை உயர்த்தப்படும்.
  • மேலும், சரக்கு வாகனங்களில் ஏற்றப்படும் எடைக்கேற்ப, வரி உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி வாகனங்களுக்கும் அதன் எடைக்கேற்ப வரி உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிஉயர்வு குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகள் சொல்லும்போது, வாழ்நாள் வரி உயர்த்தப்பட்டிருப்பதால் வாகன விலையில் 5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.. அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் ஜிஎஸ்டிசேர்த்து ரூ.7,000 முதல் ரூ.8,000 கூடுதலாக செலவழிக்க வேண்டிவரும்.. அதேபோல, ரூ.5 லட்சம் வரையிலான கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல்ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு அதிகமான கார்களுக்கு 20 சதவீதமும் விதிக்கப்படுவதால், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் கூடுதல் செலவு ஏற்படும் என்றனர்.

 

Trending News

Latest News

You May Like