அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஷாக்..! ஜாமீன் மிதான இடைக்கால தடை தொடரும்: டெல்லி உயர்நீதிமன்றம்..!

மார்ச் மாதம் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று சோதனையிட்ட அமலாக்கத் துறை அவரை அதிரடியாக கைது செய்தது. சில நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியும் இருந்தது. கைதான போதும் முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலகவில்லை. சிறையில் இருந்தே அரசை வழிநடத்துவார் என்று ஆம் ஆத்மி அறிவித்தது.
இதனிடையே மக்களவைத் தேர்தலில் பரப்புரை செய்ய ஏதுவாக மே 10 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. கடைசி கட்டத்தில் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீனை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவாலின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரண் அடைந்தார். அவர் 8 கிலோ வரை எடை குறைந்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
இந்நிலையில், கீழமை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த ஜாமீனுக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது. அதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து தீர்ப்பு கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதன் மூலமாக டெல்லி முதல்வரின் சிறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கீழமை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் வைத்த வாதங்கள் மற்றும் அவர்கள் சமர்ப்பித்த பதிலறிக்கையில் கூறப்பட்டவை கீழமை நீதிமன்றத்தில் சீராக ஆராயாமல் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கு ஏதுவாக ஜாமீன் ரத்து செய்யப்படுவதாக டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .