அசைவப்பிரியர்கள் ஷாக்..! மீன்கள் விலை கிடுகிடு உயர்வு..!

மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் இம்மாதம் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்கால சீசன் நாளை (ஏப்ரல் 14, திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது. இதனால் சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டு வந்த வஞ்சிரம் மீன் இன்று ரூ.1,000-க்கும், ரூ.200 முதல் ரூ.300 வரை விற்கப்பட்ட சங்கரா மீன் இன்று கிலோ ரூ.600-க்கும், வவ்வால் மீன் இன்று கிலோ ரூ.650க்கும் விற்பனையாகிறது. மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக இனி வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.