தெலுங்கானாவில் அதிர்ச்சி..! 5 மாதக் குழந்தையைக் கடித்துக் கொன்ற நாய்..!
கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை நாய் கடி சம்பவங்கள் ஆண்டுக்கு ஆண்டு 26.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஐதராபாத்தில் 5 மாதக் குழந்தையை வீடு புகுந்து நாய் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில் தந்தூர் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பாபுசாய் என்ற 5 மாதக் குழந்தையை பெற்றோர் கடைக்குச் செல்லும் போது வீட்டில் தூங்க வைத்துள்ளனர். அதன்பின் அருகில் கடைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது நாய் கடித்து குழந்தை உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையைக் கொன்றது தெருநாய் என்று அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் மட்டும் தெருநாய்கள் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் 14-ம் தேதி ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது சிறுமி தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்தார். ஏப்ரல் 13-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் தியோரியில் நான்கு வயது சிறுமி தெருநாய்களின் தாக்குதலால் உயிரிழந்தார்.
இந்த மாத தொடக்கத்தில், சென்னையில் உள்ள பூங்காவில் இரண்டு நாய்கள் தாக்கியதில் ஐந்து வயது சிறுமி பலத்த காயமடைந்தார். அவை வளர்ப்பு நாய்கள் என்பதால், அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.