1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் அதிர்ச்சி! தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..குழந்தை உட்பட 7 பேர் பலி!

1

திண்டுக்கல்லில் உள்ள திருச்சி சாலையில் நான்கு மாடி கட்டிடத்தில் சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். வியாழக்கிழமை (டிச.12) இரவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள மின்சாதனம் வெடித்து சிதறியதில் தீப்பற்றியது. தீ மளமளவென கீழ் தளத்திலும், அதைத் தொடர்ந்து மேல்தளங்களுக்கும் பரவியது. நோயாளிகள், உதவியாளர்களை உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் வெளியேற்றினர்.
 
மேலும் லிப்டில் சிக்கிக்கொண்டவர்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள், போலீசார், மருத்துவர்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தீ விபத்து நிகழ்ந்தபோது மருத்துவமனையின் லிப்ட்டில் ஏறி சிலர் தப்பிக்க முயற்சித்தது தெரிய வந்தது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அதிலிருந்த நோயாளிகள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில், லிப்ட்டில் சிக்கியிருந்த நோயாளிகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மயங்கிய நிலையிலிருந்த அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மாடியிலிருந்து கீழே வர முடியாமல் சிக்கிக் கொண்ட நோயாளிகளை ஏணி வைத்து மேலே சென்று ஜன்னலை உடைத்து மீட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

சம்பவ நடைபெற்ற இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்தான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1

இந்த விபத்தில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள், ஒரு குழந்தை என ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

தீ விபத்து நிகழ்ந்த மருத்துவமனையை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறுகையில், “மருத்துவமனை வார்டுகளில் இருந்தவர்களையும், லிப்ட்டில் மயங்கிய நிலையில் இருந்தவர்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் தொடர்ந்து மருத்துவமனையில் சோதனையிட்டு வருகிறோம். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

பின்னர் அமைச்சர்கள், ஆட்சியர், மேயர் இளமதி, எம்எல்ஏக்கள் செந்தில்குமார், காந்திராஜன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் திண்டுக்கல் நகர் பாலதிருப்பதியைச் சேர்ந்த மணிமுருகன் (35), இவரது தாயார் மாரிய்மாள் (65), என்ஜிஓ காலினி ராஜசேகர் (35) தேனியைச் சேர்ந்த சுருளி (50), இவரது மனைவி சுப்புலட்சுமி (45) மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like