சென்னையில் அதிர்ச்சி..!தலையில் வெட்டி வழக்கறிஞர் கொடூர கொலை..!
விருகம்பாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.
உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டியிருந்தது. ஆனால் பின்பக்க கதவு திறந்திருந்தது. அவ்வழியாக உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார் என்று விசாரித்தபோது அவரின் பெயர், வெங்கடேசன் (43) என்றும் ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது.
தற்போது அவரின் நண்பர் கார்த்திக் வீட்டில் வெங்கடேசன் சில மாதங்களாகத் தங்கியிருந்தது தெரியவந்தது. வெங்கடேசனின் நண்பர் கார்த்திக்கைக் காணவில்லை. அதனால் அவரிடம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனின் தலையை அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள். தலையில் ஆழமாக வெட்டு விழுந்திருக்கிறது.
அந்த அரிவாளை வெளியில் எடுக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இறந்து கிடந்த இடம் முழுவதும் ரத்தம் உறைந்து கிடந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு சில தினங்கள் ஆனதால் அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது.
அவர் அணிந்திருந்த தங்க நகைகள் எதுவும் கொள்ளைப் போகவில்லை. அதனால் இந்தக் கொலை எதற்காக நடந்தது என விசாரித்துக் கொண்டிருக்கிறோம். வெங்கடேசனின் நண்பர் கார்த்திக் மீது எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அவரைப் பிடித்து விசாரித்தால்தான் சில தகவல்கள் தெரியவரும்" என்றனர்.