சென்னையில் அதிர்ச்சி..! 200 மில்லி தாய்ப்பால் பாட்டில் 700 ரூபாய்க்கு விற்பனை..!
சென்னையில் லைஃப் வேக்ஸின் ஸ்டோர் என்ற மருந்து விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இதனை கே.கே.ஆர் கார்டன் பகுதியை சேர்ந்த செம்பியன் முத்து (வயது 40) என்பவர் நடத்தி வருகிறார்.
இங்கு தாய்ப்பால் பாட்டில்களில் அடைத்து விற்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போஸ், கஸ்தூரி ஆகியோர்கள் கடையை சோதனை செய்தனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200க்கு மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
விசாரணையில் சுமார் 200 மிலி கொண்ட இந்த தாய்ப்பால் பாட்டில் சுமார் 700 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த தாய்ப்பால் யாரிடமிருந்து பெறப்பட்டது? எங்கிருந்து யார் மூலமாக வந்தது என்பது போன்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே முழுமையான தகவல் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் இதற்கு முறையான உரிமம் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டது. சட்டவிரோதமாக சென்னை மாதவரம் பகுதியில் தாய்ப்பால் விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல் துறையினர் குழப்பம்: தாய்ப்பால் விற்பனை தொடர்பாக உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் புகார் அளிக்காததால் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என கூறியுள்ளனர். தாய்பால் விற்பனை செய்த தம்பதியை காவல் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர் அதிகாரிகள்.
நான்கு தினகங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம்-2006 விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளின்படி, தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி கிடையாது என்றும் தாய்ப்பாலை பதப்படுத்தி, விற்பனை செய்வதற்கான உரிமத்தை அதிகாரிகள் யாருக்கும் வழங்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறி தாய்ப்பால் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஃப்எஸ்எஸ்ஏஐ எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.