1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு ஷாக்..! முட்டை விலை ஏற போகுதாம்..!

1

நாமக்கல்லில் 1,000க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 8 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளில் இருந்து தமிழக அரசின் மதிய உணவு திட்டத்திற்கு 75 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதுதவிர அண்டை மாநிலமான கேரளாவிற்கு 4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், ஓமன், மலேசியா, இலங்கை, மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு 3 கோடி முட்டைகள் ஏற்றுமதியாகின்றன. முட்டை விலையை NECC எனப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நிலவரப்படி, நாமக்கலில் ஒரு முட்டையின் விலை 4.65 ரூபாய்.

இது ஏப்ரல் 20ஆம் தேதி 3.95 ரூபாயாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி 4.10 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 4.30 ரூபாய் என முட்டை விற்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதற்கிடையில் கோடை வெப்பத்தின் தாக்கமும் முட்டை உற்பத்தியை பாதித்துள்ளது.

இதுபற்றி NECC முன்னாள் தலைவர் பி.கே.வெங்கடாசலம் கூறுகையில், கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் முட்டையிடும் கோழிகள் நாள்தோறும் உயிரிழந்து வருவதை பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி வெயிலை தாங்க முடியாமல் உணவு உட்கொள்வதையும் கோழிகள் குறைத்துள்ளன. வழக்கமாக 110 கிராம் உணவை உண்ணும் கோழிகள், தற்போது 90 கிராம் மட்டுமே உண்கின்றன.

இவை காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தையில் முட்டை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் வெப்பத்தின் தாக்கம் என்பது 38 முதல் 40 டிகிரி செல்சியஸ்க்கு இடையில் பதிவாகி வருகிறது.

தென்னிந்தியாவில் முட்டை வர்த்தகத்தில் கேரளா முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு வரும் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை மீன்பிடித் தடைக்காலம் ஆகும். அப்போது முட்டையின் தேவை பெரிதும் அதிகரிக்கும். இதனை ஈடுசெய்ய நாமக்கல் முட்டை உற்பத்தி மண்டலம் தயாராக இருக்க வேண்டியது அவசியம். அதற்குள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like