கோவையில் மீண்டும் அதிர்ச்சி.. வீட்டின் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு சிறுமி சடலமாக மீட்பு !!

கோவையில் முட்புதரில் சாக்குமூட்டையில் கை கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மை பணியாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முட்புதரில் கிடந்த ஒரு கட்டப்பட்ட சாக்குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனையடுத்து சாக்கை அவிழ்த்து திறந்து பார்த்தபோது அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது அந்த சாக்குப்பையில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது.
இதனால் பதறிபோன தூய்மை பணியாளர்கள் உடனே இது குறித்து சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். அதேநேரத்தில் தடயவியல் துறையினர் உதவியோடு பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அது 15 வயது சிறுமியின் உடல் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த 11ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் உறுதிசெய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலுள்ள முட்புதரிலேயே சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், பிரேதத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் அவரது வீடு உள்ளது. இதனையடுத்து சிறுமியின் தாய் கலைவாணி மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அங்கு திரண்டனர். குற்றவாளிகளை யார் என கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
கலைவாணி தனது கணவர் ராஜேந்திரனை பிரிந்து 2 மகள்களுடன் வசித்து வந்தார். அவருடைய 2-வது மகள் கார்த்திகா சரவணம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 11ஆம் தேதி முதல் காணாமல் போய் உள்ளார் என்பது தெரியவந்தது
அந்த மாணவியின் செல்போன் எண்ணில் இருந்து யாரிடம் கடைசியாக பேசினார் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் அந்த மாணவி, காணாமல் போனதற்கு முன்னதாக உறவினர்களிடம் பேசியது தெரியவந்தது. சிறுமியை கொன்று சாக்குமூட்டையில் வீசியது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
newstm.in