அதிர்ச்சி..! திரிபுரா மாநிலத்தில் எச்ஐவி தொற்று நோய்க்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு..!
எய்ட்ஸ் என்கிற எச்ஐவி தொற்றைக் குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இதைக் கட்டுப்படுத்த சில மருந்துகள் கண்டறிந்துள்ளனர். இந்த கொடிய நோய்ப் பாதிப்பால் பலரும் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகின்றது. ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் எச்ஐவி பாதிப்பின் தீவிரம் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு புதிய வடிவம் எடுத்துள்ளது. அந்தவகையில், திரிபுராவில் கடந்த 2007 முதல் 2024 வரையிலான 17 வருட புள்ளி விவரங்களின்படி, சுமார் 828 மாணவர்கள் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக திரிபுராவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அரசு வெளியிட்ட எக்ஸ் பதிவில், திரிபுராவில் 828 மாணவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கும் திரிபுராவில் இருந்து மாணவர்கள் படிக்கச் சென்றிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைக் கண்டறிந்து மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் 828 மாணவர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஊசி மூலம் போதைப் பொருள் செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.