அதிர்ச்சி..! ஒலிம்பிக் மாரத்தான் வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த காதலன்..!
உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.
ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு நாடு திரும்பிய ரெபேக்கா கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.