அதிர்ச்சி..! வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பி.எட் வினாத்தாள்..!
பி.எட் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்காவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற இருந்த “படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும்” பாடத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் உயர்கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்ற நிலையில் உடனடியாக வினாத்தாளை ரத்து செய்த உயர் கல்வித்துறை நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு முன் இணையதளம் மூலம் புதிய வினாத்தாள் அனுப்பி வைத்து, அதன்படி மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. மேலும் பல்கலைக்கழக அளவில் நடத்தும் வினாத்தாளை கசிய விட்டவர்கள் யார்? இந்த கசிவு செயலுக்கு யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்திருந்தது.
அதன்படி, உயர்கல்வித்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். புதிய பதிவாளராக ராஜசேகரை நியமித்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களே கேள்வித்தாள்களை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. தேர்வு தொடங்கிய கடந்த திங்கள்கிழமை முதலே கேள்வித்தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.