பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் உயர்தர சொகுசு ஹோட்டலில் கார் திருட்டு!
'பாஸ்டியன்' ரேடாரின் பகுதியில் உள்ள இந்த ஆடம்பரமான சொகுசு ஹோட்டலில் பிரபலங்களின் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆடம்பரமான இந்த சொகுசு ஹோட்டல் பிரபலங்களின் வாரிசுகளின் விருப்பமான இடமாகவும் உள்ளது. மும்பை தாதர் மேற்கு பகுதியில் உள்ள கோஹினூர் சதுக்கத்தில் திருட்டு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவகத்தின் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு BMW Z4 கார் திருடப்பட்டது. வாகனத்தை நிறுத்துவதற்கு சாவியை சொகுசு ஹோட்டலின் ஊழியரிடம் ஒப்படைத்துவிட்டு கார் உரிமையாளர் உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாந்த்ராவில் உள்ள கட்டுமான தொழிலதிபரான 34 வயதான ருஹான் ஃபிரோஸ் கான் தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் ஹோட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளார். அதன் பின்னர் உணவருந்தி விட்டு, உணவகம் மூடப்பட்ட பிறகு, ருஹான் தனது காரைக் கொண்டு வருமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டார். ஆனால் சாவி ஊழியர்களிடம் இருக்கும் போதும் பார்க்கிங்கில் கார் இல்லாமல் காணாமல் போனதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துப் பார்த்ததில் ஜீப் காம்பஸில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பிஎம்டபிள்யூ காரை அதிகாலை 2 மணியளவில் திருடிச் சென்றது உறுதிப்படுத்தியது. அட்வான்ஸ் ஹேக்கிங் டெக்னிக்கை பயன்படுத்தி வாகனத்தை திறந்து ஓட்டிச் சென்றது பதிவாகி இருந்தது.
இது குறித்த கார் உரிமையாளரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த உணவகம் கடந்த 2016ல் ரஞ்சீத் பிந்த்ராவால் திறக்கப்பட்டது. 2019ம் ஆண்டில், ஷில்பா ஷெட்டி ஹோட்டலில் 50 சதவீத பங்குகளை வாங்கினார். அதன் பின்னர் பாஸ்டியன் ஒரு சொகுசு விடுதியாகவும் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.