1. Home
  2. தமிழ்நாடு

சசி தரூர் உதவியாளர் கைது..?

Q

தங்கம் கடத்தியதாக டெல்லி விமான நிலையத்தில் நேற்று (மே 29) சுங்கத் துறையினர் இருவரை கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் சிவகுமார் பிரசாத். இவர் காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் தனிப்பட்ட உதவியாளர் என்று தன்னை சுங்கத் துறையினரிடம் கூறியிருக்கிறார்.

துபாயில் இருந்து வந்த ஒருவரை வரவேற்பதற்காக சிவகுமார் பிரசாத் டெல்லி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இதற்கிடையே, துபாயில் இருந்து வந்த அந்தப் பயணி சிவகுமார் பிரசாத்திடம் சுமார் 500 கிராம் தங்கத்தை ஒப்படைக்க முயன்றபோது இருவரும் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சிவகுமார் பிரசாத்திடம் ஏரோட்ரோம் நுழைவு அனுமதி அட்டை உள்ளது. இதனைப் பயன்படுத்தி அவர் டெல்லி விமான நிலைய வளாகத்தில் புகுந்து, பயணியிடம் தங்கத்தை பெற முயன்றபோது கைது செய்யப்பட்டார். இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020ம் ஆண்டில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கைப்பற்றிய தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியது. இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் இன்னும் அடங்கவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது டெல்லியில் காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் உதவியாளர் எனக் கூறிக்கொண்ட நபர் தங்கம் கடத்தியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் கேரள அரசியலில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது இந்த விவகாரம்.

மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “முதலில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் தங்கம் கடத்தலில் ஈடுபட்டார். தற்போது காங்கிரஸ் எம்.பியின் உதவியாளர் தங்கம் கடத்தி கைது செய்யப்பட்டுள்ளார். இண்டியா கூட்டணியின் பங்காளிகளான காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் இரண்டும் ‘தங்க கடத்தல் கூட்டணி’” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சசி தரூர் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “நான் தர்மசாலாவில் பிரச்சாரத்தில் இருந்தபோது எனது முன்னாள் ஊழியர் சம்பந்தப்பட்ட சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கைது செய்யப்பட்ட நபர், விமான நிலைய வசதிகளை ஏற்பாடு செய்ய என்னிடம் பகுதி நேர ஊழியராக வேலை செய்து வருபவர். 72 வயதான அவர், ஓய்வு பெற்றவர். அவருக்கு அடிக்கடி டயாலிசிஸ் செய்ய வேண்டி இருப்பதால், கருணை அடிப்படையில் அவர் வேலையில் தக்கவைக்கப்பட்டார். எந்தவிதமான குற்றச்செயல்களையும் நான் மன்னிக்கப்போவதில்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like