சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி..!

காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே மாத இறுதியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு எதிராக, கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது.அவர் அடுத்தடுத்து கஞ்சா உள்ளிட்ட வழக்கிலும் சிக்கியதால் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கமிஷனரின் குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தேனி எஸ்.பியின் பரிந்துரையின்பேரில் மீண்டும் சவுக்கு மீது 2வது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால் அவரின் தாய் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது சவுக்கு மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை வெளி வந்த பிறகே உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளிவரும்.