பள்ளியில் பாலியல் தொல்லையா..? புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு..!

கடந்த 2018ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான உதவி எண் 14417 அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள். மனநல ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை 14417 எண்ணிற்கு தொடர்புகொள்வதன் மூலம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த எண் தொடங்கப்பட்ட 2018ம் ஆண்டு முதல் மாணவர்களிடையே சற்று குறைவாக இருந்த விழிப்புணர்வு பின்னர் படிப்படியாக அதிரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், பள்ளி ஆசிரியர் மாணவிகளிடையே பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகம் பெறப்பட்டன.
இந்நிலையில் பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல், அச்சுறுத்தல் குறித்து மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம். தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவை மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தாலும் மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.