1. Home
  2. தமிழ்நாடு

கடனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல்; மனைவி, மகனை கொன்று தற்கொலை செய்த தந்தை..!

கடனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல்; மனைவி, மகனை கொன்று தற்கொலை செய்த தந்தை..!


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கொனி நகரம் பயணமனில் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோனி சக்கரியா (வயது 52). இவருக்கு ரீனா (வயது 45) என்ற மனைவி உள்ளார். இவர்கள் ரியான் (வயது 7) என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

சோனி சக்கரியா குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சக்கரியா குவைத்தில் இருந்து கேரளா திரும்பியுள்ளார்.

சொந்த ஊர் திரும்பிய பின்னர் போதிய வருமானம் இல்லாத்தால் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சக்கரியா தனது உறவினர்களை விட்டு விலகியே இருந்துள்ளார். தனது மனைவி ரீனா மற்றும் மகன் ரியான் ஆகியோரிடமும் உறவினர்களுடன் பேசக்கூடாது என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மாதங்களாக சக்கரியா உறவினர்களுடன் தொடர்பில் இல்லாமல் தனியாக வசித்துவந்துள்ளார்.

இதற்கிடையில், கடன் தொல்லை அதிகரித்து வந்ததால் சக்கரியா கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சக்கரியாவிடம் அவரது உறவினர்கள் செல்போனில் பேசியுள்ளனர். ஆனால், அதன்பின்னர் சக்கரியா, அவரது மனைவி ரீனா என யாரும் உறவினர்களிடம் பேசவில்லை. மேலும், சக்கரியாவின் வீடு கடந்த சனிக்கிழமை முதல் பூட்டியே இருந்துள்ளது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சக்கரியாவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு படுக்கையறையில் சக்கரியாவின் மனைவி ரீனா மற்றும் மகன் ரியான் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், மற்றொரு அறையில் சக்கரியா தூக்கில் பிணமாக தொங்கிக்கிடந்ததை கண்டும் போலீசார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உயிரிழந்த சக்கரியா அவரது மனைவி ரீனா மகன் ரியான் ஆகியோரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடன் நெருக்கடியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சக்கரியா தனது மனைவி ரீனா மற்றும் மகன் ரியானை கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கடன் தொல்லையால் சக்கரியா தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like