ஆற்றில் மூழ்கிய நபரை காப்பாற்ற முயன்ற 7 பேர் அடுத்தடுத்து பலி..! சோகத்தில் மூழ்கிய கிராமம்!
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தின் ஸ்ரீநகர் கிராமத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள் விடுமுறை தினமான இன்று பொழுதை கழிப்பதற்காக பங்கா ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். நண்பர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்த நிலையில், பூபேந்திர ஜாதவ் என்ற இளைஞர் ஆற்று நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் உடனடியாக அவரை காப்பாற்றும் எண்ணத்தில் அவர்களும் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக மொத்தம் 7 பேர் நீரில் மூழ்கினர். நல்வாய்ப்பாக ஒருவர் மட்டும் கரைக்கு திரும்பி கிராமத்திற்குள் ஓடிச் சென்று கிராம மக்களிடம் உதவி கோரினார்.
அதன்படி ஆற்று பகுதிக்கு விரைந்து வந்த கிராம மக்கள் இளைஞர்களை மீட்க முயன்றனர். ஆனால் நீரில் மூழ்கிய 7 நபர்களையும் உயிரிழந்த நிலையில் தான் மீட்க முடிந்தது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கி உள்ளது.