செப்டம்பர் 16 பதில் செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை!
இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். மிலாதுன் நபி அன்று இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கடைபிடித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான மிலாதுன் நபி, வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தது. மிலாதுன் முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அறிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 4 ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்ட ரபி உல் அவ்வல் மாத பிறை தெரியாததால் வருகின்ற 17 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமை ஹாஜி தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 16 ஆம் தேதி மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசு விடுமுறையை செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு மாற்றி மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிக்கையில், “செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17-ம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.