1. Home
  2. தமிழ்நாடு

35வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

1

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, இருதரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் குறிப்பிட்ட தேதியில் தீர்ப்பளிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

ஆனால், இந்த வழக்கில் தாங்கள் கோரிய வங்கி தொடர்பான ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த வழக்கில் தங்களது தரப்பில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜிதரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாதங்களை மீண்டும் முன்வைக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும் (சலான்கள்), அமலாக்கத் துறை வழங்கிய வங்கி சார்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜியை, ஏப்ரல் 22-ம் தேதி 3 மணிக்கு மேல் நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நீதிபதி எஸ்.அல்லி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அவருக்கு வங்கி ஆவணங்கள் வழங்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது. பின்னர், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய வழக்கில், வரும் ஏப்.25-ம் தேதி முதல் வாதங்களை தொடங்க செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவது இது 34வது முறையாகும்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை ஏப். 30ம் தேதி வரை நீட்டித்து  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like