1. Home
  2. தமிழ்நாடு

34-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

1

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை விடுவிக்கக்கோரிய மனு மீது கடந்த மார்ச் 28-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட இருந்த நிலையில், இந்த வழக்கில் தன்னை மீண்டும் வாதிட அனுமதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ”இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை வழங்குமாறு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த ஆவணங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆவணங்கள் கிடைத்த பிறகு, அதன் அடிப்படையில் இந்த வழக்கில் வாதிட அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிக்காவிட்டால், எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்”, என செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதமன்” வங்கியில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் வேறுபாடுகள் இருக்கிறது” என வாதிட்டார்.

பிறகு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழங்கறிஞர் என்.ரமேஷ் ”வங்கி ஆவணங்கள் குறித்து செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையது இல்லை. ஆகையால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்”, என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, மீண்டும் வாதிட அனுமதி கோரும் செந்தில் பாலாஜி மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 17-ம் தேதி அளிக்கப்படும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 17-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம் தேதியான இன்று நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை வழக்கில் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம் தேதி(திங்கட்கிழமை) பிற்பகல் ஆஜர் படுத்த வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணி அளவில் செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து காரில் அழைத்துவரப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்

மேலும், ED வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்கக்கோரிய வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்களும் செந்தில் பாலாஜி தரப்பு வசம் வழங்கியது முதன்மை அமர்வு நீதிமன்றம்.

Trending News

Latest News

You May Like