18-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!
அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் 14-ல் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் கடந்த ஜன.22 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்த நிலையில், செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை, சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி விடுப்பில் சென்றதால் 3-வது கூடுதல் அமர்வு நீதிபதி டி.வி. ஆனந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதையடுத்து அமலாக்கத் துறை யின் பதில் மனுவுக்கு பதிலளிக்க செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை பிப்.7-க்கு தள்ளிவைத்ததோடு, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் 18-வது முறையாக பிப்.7 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.