36-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு..!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். ஜாமீன் கோரி அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 4 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வங்கி ஆவணங்களை வழங்கி, அதன் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வங்கி தொடர்பான அசல் ஆவணங்களை செந்தில் பாலாஜியிடம் வழங்கியது. இதையடுத்து, இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்து, இன்று (ஏப்ரல் 30) உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றம் அசல் செலான்களை வழங்க உத்தரவிட்ட நிலையில், வங்கி தாக்கல் செய்த செலான்களில் இரண்டு செலான்கள் நகலெடுக்கப்பட்டவை என்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் செலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதன் மூலம் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.