சிக்கலில் செந்தில் பாலாஜி..! 4 மாதங்களுக்கு ஜாமீன் கிடைக்காத நிலை...
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் சில காலத்திற்கு துறை இல்லாத அமைச்சராக தொடர்ந்த நிலையில் எதிர்க்கட்சகிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவர் அமைச்சராகவே இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத் துறை வாதிட்டது. இதையடுத்து அடுத்த முறை ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்ததற்கு ஒரு நாளுக்கு முன்பு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் 3 முறை ஜாமீன் மனுவை தாக்கல் செய்து அவை ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து நேற்று 41 ஆவது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் மனுவை ஆனந்த் வெங்கடேசன் தள்ளுபடி செய்து 3 மாதங்களில் விசாரணையை முடிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை முடிக்கவில்லை. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில், செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை 4 மாதங்களில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிக்க வேண்டும். மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக் கூடாது. 4 மாதங்களில் வழக்கை முடிக்கும் திறமை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லிக்கு உள்ளது. இவ்வாறு ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். எனவே இன்னும் 4 மாதங்களுக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படாது என்றே தெரிகிறது.