அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி அட்டாக்! உள்ளூரிலும் தோல்வி.. வெளியூரிலும் தோல்வி!
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மாநகராட்சியில் சாலை பணிகளுக்காக ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடுதலாக காந்திபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க ரூ.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்தி சாலை அகலப்படுத்துவதற்காக ரூ.54 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் அதனை தருவதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
அப்போது, அதானி - திமுக தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை. எனவே சில கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
உள்ளூரில் நின்றாலும் தோல்வி, வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள், அரசியலில் முகவரி இல்லாதவர்கள் தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக, வெளிச்சத்தை பெறுவதற்காக அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள். அந்த அவதூறு கருத்துக்களை பற்றி கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை. அரசியல் என்பது நாகரிகமாக இருக்க வேண்டும். அரசியலில் இருக்கக்கூடியவர்கள் பக்குவப்பட்டவர்களாக இருக்க வேண்டும். கருத்துக்கள் தெரிவிக்கும்போது யாரையும் பழிச்சொல் பேசுவது போல் இல்லாமல் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள், பக்குவம் இல்லாதவர்கள் தான் அது போன்ற வார்த்தைகளை தான் பயன்படுத்துவார்கள். அதனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.