பாஜகவுக்கு குட்பை சொன்ன மூத்த தலைவர்! முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்சே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மூத்த தலைவராக வலம் வந்தவர் ஏக்நாத் கட்சே. முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அடுத்த நிலையில் வைத்து அழகு பார்க்கப்பட்டார்.
இந்த நிலையில், இவர் மீது ஊழல் புகார் மற்றும் நிழல் உலக தாதா என்றழைக்கப்படும் தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு ஆகிய புகார்கள் அணிவகுத்து நின்றன. இதனால், இவரை பாஜக தலைமை சற்று ஒதுக்கி வைத்திருந்தது.
இதனால் மனம் உடைந்த அவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போதே, பாஜகவில் இருந்து விலகிவிடுவார் ஆருடம் கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனை, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்களும் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து தாம் விலகுவதாக ஏக்நாத் கட்சே இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் மகாராஷ்டிரா மாநில கட்சித் தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு, தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏக்நாத் கட்சே இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இருந்து ஏக்நாத் கட்சே விலகியிருப்பது அம்மாநில நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.