1. Home
  2. தமிழ்நாடு

விற்பனையாளர்களே உஷார்..! பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிட பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் 2000 ரூபாய் அபராதம்..!

1

 கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாக துறை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் கலப்படமற்ற மற்றும் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிட பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 58-ன் படி ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

இனிப்பு, கார மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பின் போதும், இருப்பு வைக்கும் போதும் அச்சிடப்பட்ட செய்திதாள்களை தரையில் விரித்து எண்ணெய்யை உறிஞ்சும் வகையில் வைத்திருக்கும் நடைமுறையை கண்டிப்பாக பின்பற்றக் கூடாது. மேலும், சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர், கவர் கொண்டு பொட்டலமிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதை மீறினால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் 2006-ன் படி அபராதம் விதிக்கப்படும்.

இனிப்புகளை தயாரிக்க அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள், அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக கலர் நிறமிகள் இனிப்பு வகைகளில் சேர்க்கப்பட்டிருப்பது களஆய்வில் கண்டறியப்பட்டால், உணவு மாதிரி எடுக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பகுப்பாய்வக அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவு வணிகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய், நெய், வனஸ்பதி போன்ற பிற இதர மூலப் பொருட்களின் விவரங்களை முழுமையாக அதன் கொள்முதல் கேன்கள், டின், பாக்கெட்டுகள், மூட்டை போன்றவைகளில் லேபிளில் முழுமையாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக இருப்பு வைக்க வேண்டும். பால் சார்ந்த இனிப்பு வகைகளின் உபயோகிக்கும் கால அளவை லேபிளில் முழுமையாக குறிப்பிட வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகளை தூய்மையான குடிநீரைக் கொண்டு தயாரிக்கப் வேண்டும். தயாரித்த பின் பாத்திரங்கள் உபகரணங்களை சுத்தமாக கழுவி பூஞ்சை தொற்று வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இனிப்பு வகைகள் சில்லறை முறையில் விற்கப்படும் பொருட்களில் எண்ணெய், நெய், வனஸ்பதி பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் பால் சார்ந்த பொருட்கள் குறித்த பதிவுகள் காட்சிபடுத்தப்பட்டிருக்க வேண்டும். பதிவேட்டிலும் பராமரிக்க வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் சமுதாயக் கூடங்கள், பிற இதர இடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தற்காலிகமாக இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் https://fosens.fssai.g என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் வணிகத்தினை பதிவு, உரிமத்தை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இந்திய உணவுப் பாதுகாப்பு துறையால் அங்கீகரீக்கப்பட்ட கோவை மாவட்ட முகவர்கள் ராமசந்திரன்பாபுராஜ்-9940953624, மோகன்ராஜ் -7092592561, பாலமுருகன்-9361270767, நீலகண்டன்- 9739320193, ப்ரியா கிருஷ்ணசாமி-9842905604, தீபா சுதன்கோபால்-9789914439, வைஷ்ணவி பெருமாள்சாமி-9715709625, விக்னேஷ்-9688449905, சபரீஸ்வரன் திருமலைசாமி-9677711700, சிவனேஸ்வரன் முத்துச்சாமி 8248775546, வெற்றிசெல்வன்-9566950273, முகம்மது ஷெரீப்-6369902410 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இனிப்பு மற்றும் கார வகை உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், கையாள்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு சார்ந்த பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ தகுதி சான்று வைத்திருக்க வேண்டும். சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு இனைப்பு வகைகளை விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006, பிரிவு 31-ன் கீழ் உரிமம், பதிவு பெற்றிருத்தல் வேண்டும். ஏற்கெனவே உரிமம் பெற்று, காலக்கெடு முடிந்தால் அதனை உடனே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். கள ஆய்வின் போது உணவுப் பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டத்தின் கீழ் உரிமம், பதிவுச் சான்று பெறப்படாதது கண்டறியப்பட்டால் உணவு வணிகரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு, விபரச்சீட்டு இடும் போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுபொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவை அவசியம் குறிப்பிடப்பட வேண்டும்.

பணியாளர்கள் கையுறை, முடிக் கவசம், முகக் கவசம் மற்றும் மேலங்கி போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் திரும்ப சூடுபடுத்தி இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. போலியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எனக் கூறிக்கொண்டு ஆய்வு மேற்கொண்டால் அவர்களின் உணவு பாதுகாப்பு துறையின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவிக்கலாம்.

இது தொடர்பான புகார்களை, 0422-2220922 மற்றும் 9361638703 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் ‘tnfoodsafety consumer App’ என்ற செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்தும் புகாரை பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like