நகராட்சி பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!!

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமாரின் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறையினர் 15 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.
இவர் ஜனவரி முதல் வேலுார் மாநகராட்சி மண்டல உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் பதவி உயர்வு வழங்கப்பட்டு, ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளராக மாற்றப்பட்டார். இங்கும் லஞ்சம் வாங்குவதாக மீண்டும் புகார்கள் வந்தன.
இந்நிலையில், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மதியழகன் தலைமையில் ஏழு பேர் குழுவினர் நேற்று காலை 9 முதல் செல்வகுமார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அதில், கணக்கில் வராத ரூ.23,32,770 பறிமுதல் செய்தனர். மேலும் அவர் சொத்துக்கள் வாங்குவதற்காக, ராணிப்பேட்டை வங்கியில் எடுத்து வைத்திருந்த ரூ.10,73,520 ரொக்கம், ஏராளமான சொத்து பத்திரங்கள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கணக்கில் வராத 193.75 சவரன் நகைகள், 2.17 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
newstm.in