1. Home
  2. தமிழ்நாடு

சீமான்-நடிகை விஜயலட்சுமி வழக்கு முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

1

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பும் (சீமான், விஜயலட்சுமி) பேசி முடிவுக்கு வர சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால், சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டும் என்று விஜயலட்சுமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீமானை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து வழக்கை சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.

இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமுகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.

இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறு பேசியதற்காக சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான். எனது சொல், செயல்களால் விஜயலட்சுமிக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறேன். விஜயலட்சுமிக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாகவும் சீமான் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் நடிகை தரப்பிலும் மன்னிப்பு கோரப்பட்டது. சீமான் மற்றும் விஜயலட்சுமியின் பரஸ்பர மன்னிப்பை ஏற்று வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் எந்த ஒரு வழக்கையும் இதற்கு மேலாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை எனவும் சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக சுப்ரீம் கோர்ட்டில் விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like