சீமானுக்கு கல்தா கொடுக்கும் தம்பிகள்..நீளும் லிஸ்ட்! இன்று மேட்டூர் ஜீவானந்தம் ராஜா கட்சியில் இருந்து விலகல்..!
தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு தேர்தலை சந்தித்த பிரதான அரசியல் கட்சிகளில் இதுவரை கூட்டணி அமைத்துப் போட்டியிடாத கட்சி என்றால் நாம் தமிழர் கட்சி மட்டும் தான். திமுக - அதிமுக மட்டுமே தங்களுக்குள் கூட்டணி அமைக்காமல், அனைத்து பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன.
இதற்கு தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அப்படி தமிழக இளைஞர்களிடையே மாற்று சக்தி என்ற மாபெரும் முழக்கத்தோடு வந்த நாம் தமிழர் கட்சிக்கும் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
திரைத்துறையிலிருந்து ஈழத் தமிழ் விவகாரம், தமிழ் தேசியம் போன்ற முழக்கங்களோடு அரசியலில் குறித்த சீமானுக்கு மெல்ல மெல்ல இளைஞர்களிடையே ஆதரவு பெருகியது.
அதே நேரத்தில் தற்போது சீமானின் பேச்சுகளில் மாற்றம் நிகழத் தொடங்கியது, தேர்தல் அரசியலில் சீமானுக்கு பின்னால் அணி திரள தொடங்கியவர்களில் பல முக்கிய நிர்வாகிகள் தற்போது தனியே சென்று விட்டனர். காரணம், ஏற்கனவே சொன்னது போல ஆண்டுகாண்டு சீமானின் செயல்பாடுகளிலும் பேச்சுகளிலும் ஏற்பட்ட மாற்றம் தான். ஆரம்பத்தில் பெரியாரை உயர்த்தி பிடித்த சீமான் பின்னர் அவரை தரம் தாழ்ந்து பேசத் தொடங்கினார். அது மட்டும் அல்லாமல் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒருமையில் சீமான் பேசியது அவர் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை தந்தது.
தற்போது கட்சி ஆரம்பத்திற்கு விஜயை மாநாட்டுக்கு முன்பு வரை தம்பி என்று அழைத்த சீமான் அதற்குப் பிறகு செத்துப் போய் விடுவாய் என பேசியது அவரது கட்சி தொண்டர்களையே ரசிக்க வைக்கவில்லை. இந்த நிலையில் தான் சீமான் மீது பல நிர்வாகிகள் அதிருப்தி காரணமாக வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் என பலரும் வெளியேறினார். மேலும் காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோரும் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னரே முக்கிய நிர்வாகிகளாக அறியப்பட்ட கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் திமுகவிலும் அதிமுகவிலும் ஐக்கியமாகியுள்ளனர்.
சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக பார்க்கப்பட்ட அழகாபுரம் தங்கம், அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணைத் தலைவராக உள்ள ஜீவானந்தம் ராஜா கட்சியில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்