சென்னையில் சீமான் கைது..!
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. போராட்டம் நடத்திய பா.ஜ.,வினரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (டிச.,31) காலை 10:00 மணிக்கு அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று காலை 10:00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நடப்பதாக இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு சீமான் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, சம்பவ பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சீமான் அழைப்பை தொடர்ந்து போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சியினர் கூட, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
போலீசாரின் கைது நடவடிக்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அங்கே கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் சீமான் காரில் வந்தார். பின்னர் காரில் இருந்த இறங்கி போராட்டக்களம் நோக்கி செல்ல முயன்ற அவரை போராட அனுமதி இல்லை என்று கூறி போலீசார் கைது செய்தனர்.