கோவில் கலச நவதானியம் 15 ஆண்டுக்கு பின் எப்படி இருக்கு பாருங்க!

ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2009ம் ஆண்டு தூத்துக்குடியின் திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதனையடுத்து 2021ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா தொற்று காலகட்டம் என்பதால் குடமுழுக்கு நடைபெறவில்லை. இதனையடுத்து இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களை மாற்றும் பணிகள் நடைபெற்ற நிலையில், 137 உயரத்திலிருந்த கலசத்திலிருந்து வரகு தானியம் எடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த வரகு அப்படியே இருப்பதாக பணியாளர்கள் கூறியுள்ளனர். இதை கண்டு பக்தர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கலசங்களில் தானியங்களை வைக்கும் பழக்கம் ஏற்பட்டது ஏன்?
தமிழ் சமூகத்தில் தானியங்கள் என்பது செழிப்புக்கான அறிகுறி. திருமண சடங்குகளில் தானியங்கள் முக்கிய இடம் பெற்றிருக்கும். அதேபோல மரணத்தின் இறுதி சடங்குகளிலும் தானியம் முக்கிய இடம் பெற்றிருக்கும். காரணம் திருமணத்தின்போது செழிப்பாக வாழ வேண்டும் என்றும், இறப்பின்போது செழிப்பாக இருந்தார் என்பதற்காகவும் தானியங்கள் வைக்கப்படுகின்றன. அதேபோல தெய்வம் என்று வரும்போதும் அவைகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்று தானியங்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.