விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு திடீரென பாதுகாப்பு அதிகரிப்பு..!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தில் பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆம்ஸ்ட்ராங் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழகம் வந்த மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தனக்கும், விசிக தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கான பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டுள்ளது. அவருடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசிக நிர்வாகிகள் கூறும்போது, “கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்படாத நிலையிலும் அரசு சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள இருவரும் சென்னையில் திருமாவளவன் இருக்கும்போது பணியில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.