புதுச்சேரியில் இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!

புதுச்சேரி மாநிலம் காலப்பட்டு பகுதியில் தனியார் மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 4-ம் தேதி இரவு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் அங்கு பணிபுரிந்த 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும், தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும், தொழிற்சாலையை மூட கோரி தொழிலாளர்கள், பொதுமக்கள், மீனவ மக்கள் ஆகியோர் தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து தொடர் போராட்டம் காரணமாக தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் நலனுக்கு ஆதரவாகவும், தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும், தொழிற்சாலையை மூட கோரி புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் காலாப்பட்டு முழுவதும், காலாப்பட்டு ஈசிஆர் பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்து 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.அதே நேரத்தில் திருமணம், இறப்பு ஊர்வலத்துக்கு தடை இல்லை என்று கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.