3-வது நாளாக குமரியில் கடல் சீற்றம்..! எச்சரிக்கை நீடிப்பு..!
குமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் சுமார் 10 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்து பாறைகளில் மோதி சிதறின. கடல் சீற்றத்தால் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதுபோல் சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது.
இதேபோல், கொல்லங்கோடு இரையுமன்துறை, மிடாலம், இனயம் சின்னத்துறை பகுதிகளிலும் கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி அலை தடுப்புச் சுவரை கடந்து கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் அச்சமடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.
இந்த நிலையில், குமரியில் இன்று மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு வர தடை விதிக்கப் பட்டுள்ளது. லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படை போலீஸாரும் கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தடங்கலின்றி நடைபெற்றது. கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து விவேகானந்தர் பாறைக்கு சென்று வந்தனர்.