1. Home
  2. தமிழ்நாடு

டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ‘ஸ்கோச்’ விருது..!!

டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ‘ஸ்கோச்’ விருது..!!


கடந்த 2003-ம் ஆண்டு ‘ஸ்கோச்’ விருது உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டவர்களை கண்டு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சமுதாய பணிகளில் தங்களை அர்ப்பணித்து கடமையைத் தாண்டி பணியாற்றி சாதனை படைப்பவர்கள் இந்த விருதைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ‘ஸ்கோச்’ பொது சேவை விருதை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பெற்றுள்ளார்.

பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பில், கும்பகோணம் தீ விபத்தில் ஏற்பட்ட பின்விளைவுகளை கையாண்டது; நாகை மாவட்டத்தில் சுனாமி பேரிடரின் போது ஏற்பட்ட அழிவிற்கு அடுத்தபடியாக, அதில் இருந்து மக்களுக்கு மறுவாழ்வு நிவாரணங்களை வழங்கியது; தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அவரது தீவிர பணி ஆகியவை அவருக்கு இந்த விருதை பெற்று தந்துள்ளன.

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி தீவிபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். 18 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பணியாற்றினார். தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான நிவாரணங்களை வழங்கினார்.

அதுபோல 2004-ம் ஆண்டு டிசம்பரில் சுனாமி பேரலை தாக்கியபோது அவர் நாகை மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். அப்போது மக்கள் நிவாரணத்திற்காக அவர் இரவு பகலாக உழைத்த உழைப்பு, சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.

தற்போது கொரோனா பரவல் தடுப்பு பணியில் நீண்ட நாட்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். இதில் அவரது பணி, இரண்டு வெவ்வேறு ஆட்சிகளிலும் தொடர்வதே அதற்கு சான்றாக உள்ளது.

இந்த மட்டற்ற பொதுசேவை பணிகளுக்காக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ‘ஸ்கோச்’ பொது சேவை விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதை அவர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, “பொது சேவையில் கடமையை தாண்டி பணி செய்ததற்கு, குறிப்பாக கும்பகோணம் தீ விபத்து, சுனாமி பேரிடரின்போது செய்த பணிகள், தற்போது கொரோனா காலத்தில் ஆற்றிய தடுப்பு பணிகளை வைத்து விருது வழங்கப்பட்டுள்ளதாக விழாவின் குறிப்புரையில் கூறப்பட்டுள்ளது. இந்த விருதினை பெறும்போது, மறைந்த எனது தாயார் கூறிய பொன்மொழிகள்தான் நினைவுக்கு வருகிறது.

அதாவது, “விருதை எதிர்பார்த்து எந்த பணியையும் செய்யாதே, பேரிடர் காலத்தில் அதுவும் மிகவும் இக்கட்டான காலத்தில் அரசு உனக்கு வழங்கிய பணிக்கான வாய்ப்பு எத்தகையது என்பதையும், அதை வரப்பிரசாதமாகவும் நினைத்துக்கொள்” என்று அவர் கூறியதை நினைத்து பார்க்கிறேன். இந்த பணி செய்வதற்கு எனக்கு வாய்ப்பு தந்த அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அந்தந்த மாவட்டங்களில் என்னுடன் பணியாற்றிய அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன். அவர்களால் தான் இந்த விருது எனக்கு கிடைத்தது.” எனக் கூறினார்.

Trending News

Latest News

You May Like