2 மாதங்கள் ஆகியும் ஸ்கூட்டர் டெலிவரி செய்யவில்லை...ஸ்கூட்டர் நிறுவனத்திற்கு பாடம் கற்பித்த கோவை இளைஞர்..!

கோவையை சேர்ந்தவர் பிரோஸ் ராஜன், இவர் பெங்களூருவை சேர்ந்த ஒரு மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிறுவனத்தில் மின்சார ஸ்கூட்டர் வாங்க முடிவு செய்தார். இதன்படியே கடந்த 1-9-2023 அன்று ஆன்லைன் மூலம் தனக்கு பிடித்த மாடலில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை முன்பதிவு செய்தார். மின்சார ஸ்கூட்டருக்கான தொகையாக ரூ.1 லட்சத்து 67 ஆயிரம், வாகன காப்பீட்டு தொகையாக ரூ.6,199-ஐ அனுப்பி உள்ளார்.
ஸ்கூட்டர் முன்பதிவு செய்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஸ்கூட்டரை டெலிவரி செய்யாமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்துள்ளார்கள். இதனால் முன்பதிவை ரத்து செய்து விட்டு பணத்தை திருப்பி தருமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதற்கு அந்த நிறுவனம் போதிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது,
இதையடுத்து ஸ்கூட்டர் கிடைக்காததால் கவலை அடைந்த பிரோஸ் ராஜன் கோவை நுகர்வோர் கோர்ட்டில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை புகார் மனுவாக அளித்தார். இந்த மனுவை நுகர்கோர் கோர்ட்டு தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் விசாரித்து வந்தனர். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில், பெங்களூருவை சேர்ந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிறுவனம் சேவை குறைபாடு செய்து உள்ளது. எனவே மின்சார ஸ்கூட்டருக்கு பிரோஸ் ராஜனிடம் பெற்ற தொகை ரூ.1 லட்சத்து 67 ஆயிரம், காப்பீட்டுக்காக பெற்ற தொகையான ரூ.6,199-ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.